Saturday, 4 June 2016

இட்லி


மசாலா இட்லி..!!!

தேவையானவை:

இட்லி – 10, வெங்காயம், தக்காளி – தலா 2, கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்,  இட்லிகளை ஓர் அங்குல சதுர துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி, உப்பை சேர்த்து வதக்கவும் (கொஞ்சம் நீர் தெளித்துக் கொள்ளலாம்). இதனுடன் பொரித்த இட்லி துண்டுகளை சேர்த்து ஒரு புரட்டு புரட்டி… சுடச்சுட பரிமாறவும்
++++++++++++++++++++++++++++
சமீபத்தில் இங்கிலாந்தின் தேசிய உணவுத் திட்டத்தின் கீழ் இட்லி, தோசை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இட்லி மீது நூற்றுக்கணக்கான ஆய்வுகளை மேற்கொண்டு, நோயில்லாமல் வாழ மிகச் சிறந்த உணவு என்ற பரிந்துரையை அறிவியலார்கள் தெரிவித்துள்ளதுதான். எந்தத் தட்பவெப்ப நிலை, மக்களின் நல்வாழ்வுக்கும் ஏற்றது இட்லி.



சத்து இழப்பு தவிர்ப்பு

நீராவியில் வேக வைப்பதால் இட்லியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் சத்துப்பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. தயமின் போன்றவை வெப்பத்தால் ஆவியாகக் கூடியவை. அதேநேரம் உணவு நீராவியால் வெப்பப்படுத்தும்போது, பாதிக்கப்படுவதில்லை.

உளுந்தில் உள்ள டிரிப்சின் நொதி தடுப்பான்கள், புரதத்தைச் செரிமானம் செய்து நமது குடல் உட்கிரகிப்பதைத் தடை செய்யக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளன. நீராவியில் வேக வைக்கும்போது, இவை செயல் இழந்துவிடுகின்றன.

உளுந்தை நீராவியில் வேக வைப்பதன் மூலம், உளுந்தில் உள்ள சத்தைச் சேதப்படுத்தும் காரணிகள் (Anti nutritive factors) அழிக்கப்படுவதால் கனிமச் சத்துகள் உடலுக்குக் கிடைப்பது அதிகரிக்கிறது.

விழித்துக் கொள்வோமா?

உளுந்தில் உள்ள ‘அரோபினோ காலக்டோன்’ என்ற சர்க்கரைப் பொருள் நொதிக்கப்பட்டிருப்பதே, இட்லி மிருதுவாக இருக்கக் காரணமாகிறது. இட்லியில் உயிரியல் மற்றும் புரத மதிப்பு (Biological value & Protein efficiency ratio) அதிக அளவிலும், அதேநேரம் புரதச் சமநிலையுடனும் உள்ளதாகப் பூர்வாங்க ஆய்வுகள் தெளிவாக விளக்குகின்றன.

நம்மவர்கள் நம் உணவை விட்டு விலகி வரும் இந்தக் காலத்தில், அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உலகம் நம் உணவைத் தேடிவர ஆரம்பித்திருக்கிறது, இதற்கு மேல் விழித்துக்கொள்வது அவரவர் பொறுப்பு.

தோல் உளுந்து அதிக ஊட்டம் முதல் உணவு

இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது தோலுடன் உள்ள கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. திருநெல்வேலி மாவட்டத்தில் முழு உளுந்து தோசை வீடுதோறும் நடைமுறையில் உண்டு. உளுந்து தோலில்தான் leuconostec mesenteroides என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது.

இந்தப் பாக்டீரியாதான் இட்லி மாவு புளிப்பதற்குக் காரணம். அத்துடன் உளுந்துத் தோலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சம விகிதத்தில் உள்ளன. தோல் நீக்கம் செய்யப்பட்ட உளுந்தைப் பயன்படுத்தும்போது, மாவைப் புளிக்க வைக்க வெந்தயம் சேர்க்கிறார்கள். இருந்தபோதும், வெள்ளை நிறத்துக்கு மயங்கிப் போகாமல் தோல் உளுந்துடன் இட்லி, தோசையைச் சாப்பிடுவது உடலுக்குக் கூடுதல் வலுவூட்டும்

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: sriramsiddha@gmail.com
++++++++++++++++++++++++
இட்லி 65

தேவையானவை:

 இட்லி - 5
 கடலைமாவு - சிறிதளவு
 மிளகாய்தூள் - சிறிதளவு
 பெரிய வெங்காயம் - 1
 தக்காளி - 1
 உப்பு - சுவைக்கேற்ப
 சீரகம் - சிறிதளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 இஞ்சி,பூண்டு விழுது-ஒரு ஸ்பூன்
மல்லித்தழை சிறிதளவு.

செய்முறை:

 வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில்அடிக்கவும். இட்லியை ஒரு இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலைமாவையும் மிளகாய்தூளையும்  கலந்துகொள்ளவும்.
 இட்லி துண்டுகளின் மேல் இந்தக் கடலைமாவுக் கலவையை சிறிதளவு தூவிப் பிசறி, எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

பிறகு, வேறொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, வெங்காயத் துண்டுகளை சேர்த்து வதக்கவும். அதில் தக்காளி சாறை ஊற்றி நன்றாக கெட்டியானவுடன், பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை இதில் போட்டு ஒரு புரட்டு புரட்டி, பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கினால், அதுதான் சுவையான ‘இட்லி 65’.

No comments:

Post a Comment