Saturday, 25 June 2016

Veg Items



கொத்தமல்லி வடை,மசாலா பால், மாம்பழ மோர்க்குழம்பு, கொண்டைக்கடலை பிரியாணி, கத்தரி முருங்கை பால் குழம்பு, உடல் பருமன் அடைய, திப்பிலி ரசம், திரிகடு சூரணம், உள்ளித்தீயல், பாகற்காய் ஊறுகாய், இஞ்சி அல்வா, திரிகடுக ரசம், கொண்டக்கடலை  வடை, கறுப்பு உளுந்து அடை, வெங்காய குருமா, குதிரைவாலி பிரியாணி, நவதானிய தோசை, எள்பொடி, கும்மாயம் இனிப்பு பலகாரம், முளைகட்டிய பயறு தோசை, முறுக்கு, அதிரசம், தேன் - தினை மாவு லட்டு, தினை மாவு அடை, சத்து மாவு பொடி, செட்டிநாடு காய்கறி பிரியாணி, 


கொத்தமல்லி வடை

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2 கப்
கொத்தமல்லி - 1 கட்டு (நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மாங்காய் தூள், மிளகாய் தூள் மற்றும் அரிசி மாவு சேர்த்து, தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின்பு அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னறிமாக பொரித்து எடுத்தால், சுவையான கொத்தமல்லி வடை ரெடி! சாப்பிட்டு மகிழுங்கள்.!!


மசாலா பால்

தேவையான பொருட்கள்:

பால் - 2 கப்
பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
கிராம்பு - 2
பாதாம் - 4
பிஸ்தா - 6
பட்டை - 1/2 இன்ச்
ஏலக்காய் - 1 (தட்டிக் கொள்ளவும்)
குங்குமப்பூ - சிறிது

செய்முறை:

முதலில் பாதாம் மற்றும் பிஸ்தாவை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, தோலுரித்து பொடியாக நறுக்கி அல்லது அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் 1 டீஸ்பூன் பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் சிறிது நேரம் கழித்து அதில் உள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காயை எடுத்துவிட வேண்டும். பின்பு அதில் குங்குமப்பூ பால், மிளகுத் தூள், சர்க்கரை, பனங்கற்கண்டு, நட்ஸ் ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி பரிமாறினால், சுவை!

மசாலா பால் உடலுக்கு நல்லது. இதற்கு இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் தான் காரணம்.


மாம்பழ மோர்க்குழம்பு

தேவையானவை:
மாம்பழம் - ஒரு கப்
தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்பொடி - சிறிது
அரைக்க:
தேங்காய் - அரை கப்
காய்ந்த மிளகாய் - 4
சீரகம் - கால் டீஸ்பூன்
பச்சரிசி - 2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:
மாம்பழத்தை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். தயிருடன் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கடைந்து கொள்ளவும். தேங்காய், காய்ந்த மிளகாய், சீரகம், பச்சரிசி முதலியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த தேங்காய் விழுது, கடைந்த தயிர் முதலியவற்றை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் மாம்பழக் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி விடவும். ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் தாளித்து மோர்க்குழம்பில் ஊற்றி இறக்கவும்.

பி.கு. தயிர் சேர்த்தவுடன் அதிகம் கொதிக்க விடக் கூடாது. தயிர் திரிந்து விடும்.


கொண்டைக்கடலை பிரியாணி

தேவையான பொருட்கள் :

கொண்டைக்கடலை – 1/2 கப்
பாஸ்மதி அரிசி – 2 கப்
தயிர் – 1/2 கப்
வெங்காயம் – 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி அளவு
எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
பிரியாணி மசாலா – 1/2 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் + நெய் – 1 மேஜை கரண்டி
பட்டை – 1, கிராம்பு – 2, பிரியாணி இலை – 1

செய்முறை :

• வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். கொண்டைக்கடலை 5 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு 5 விசில் வரும் வரை போட்டு வேகவைத்து கொள்ளவும்.

• குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்து அத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதங்கிய பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

• இத்துடன் வேகவைத்துள்ள கொண்டைக்கடலை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலா நன்றாக சேர்த்து கிளறவும். பிறகு தயிர் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு அரிசியினை கழுவி தண்ணீர் இல்லாமல் இதில் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

• இத்துடன் நறுக்கிய புதினா, கொத்தமல்லி மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதிவந்தவுடன் குக்கரை மூடி 1 விசில் வரும் வரை வேகவிடவும்.

• குக்கரில் பிரஸர் அடங்கியதும் அதனை திறந்து அத்துடன் 1 தேக்கரண்டி நெய், எலுமிச்சை சாறு ஊற்றி ஒரு முறை கிளறிவிடவும்.

• சுவையான சத்தான கொண்டைக்கடலை பிரியாணி ரெடி. இதனை ராய்தா, உருளை வறுவல், சிப்ஸ் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


கத்தரி முருங்கை பால் குழம்பு

கத்தரிக்காய் - 3
முருங்கைக்காய் - 2
தனியா, சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் - 1
புளி, கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 1 குழி கரண்டி

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மிளகாய், சீரகம், தனியா மூன்றையும் லேசாக எண்ணெய் விட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுக்கவும். கத்தரிக்காய், முருங்கைக்காயை நறுக்கி சிறிதளவு தேங்காய்ப் பாலில் போட்டு வைக்கவும். புளியைக் கரைத்து, கொதிக்க விடவும். அதில் அரைத்த மசாலாவைச் சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் நல்லெண்ணெய் சேர்க்கவும். பிறகு பாலில் ஊறப்போட்டுள்ள காய்களைச் சேர்த்து, வேக வைக்கவும். காய்கள் வெந்ததும் மஞ்சள்தூள், தேங்காய்ப்பால், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

சாதம், டிபன் வகைகள் இரண்டுக்கும் இந்தப் பால் குழம்பு ஏற்றது.


உடல் பருமன் அடைய:

கறுப்பு எள், வேர்க்கடலை, கறுப்பு உளுந்து
உலர்ந்த திராட்சை, பனைவெல்லம்.

அனைத்தையும் நன்றாக அரைத்து மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால், இளைத்த உடல் பருக்கும். அத்துடன் விந்து வீர்யம் அடைந்து, உறவில் நாட்டம் அதிகரிக்கும்.

மேலும் உடல் போஷாக்கு:
பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, அக்ரூட் பருப்பு (Walnut), பிஸ்தா பருப்பு;
வெள்ளரி விதை, பூசணி விதை, முருங்கை விதை;
அத்திப் பழம், நெல்லிக்கனி, பேரீச்சம்பழம்;
பால்முதப்பன் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, நிலப் பூசணி;
முருங்கைப் பூ, முருங்கை பிசின்;
சர்க்கரை, பசும்பால்;


திப்பிலி ரசம்

தேவையான பொருட்கள் :

கண்டந்திப்பிலி – 10 கிராம்
சீரகம் – 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் – 2
புளி – சிறிய எலுமிச்சம் பழ அளவு
உப்பு – தேவைக்கு

தாளிக்க:

நெய்  – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

* வாணலியில் கண்டந்திப்பிலி, சீரகம், துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய் போன்றவைகளை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள்.

* புளியை கரைத்து பாத்திரத்தில் கொட்டி கொதிக்கவிடுங்கள். நன்கு கொதிக்கும்போது அரைத்து வைத்துள்ள பொடியைகொட்டி, லேசாக கொதிக்க விடுங்கள்.

* கடைசியாக தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து கொட்டுங்கள்.

* கண்டந்திப்பிலி உடல் வலியை போக்கக்கூடியது. சளி, இருமலுக்கு நல்ல மருந்து. பிரசவித்த பெண்கள் இந்த ரசத்தை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட வேண்டும். உடல்வலி நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


திரிகடு சூரணம் :

தேவையான மருந்துகள்:
1. சுக்கு – சுந்டீ - 10 கிராம்
2. மிளகு – மரீச்ச - 10 “
3. திப்பிலி – பிப்பலீ - 10 “

குறிப்பு : சுக்குக்கு புற நஞ்சு எனவே - சுக்கை மேல் தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

செய்முறை : இவைகளை முறைப்படி பொடித்துச் சலித்து ஒன்று கலந்து பத்திரப்படுத்தவும்.

அளவு : ½ முதல் 1 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.

அனுபானம் : தேன், நெய், தண்ணீர்.

தீரும் நோய்கள் :

விட்டுவிட்டு வரும் முறைக்காய்ச்சலைப் போன்ற பலவிதகாய்ச்சல்கள் (ஜ்வர), வயிற்று உப்புசம் (ஆத்மான), உணவில் விருப்பமின்மை (அரோசக), பசியின்மை (அக்னி மாந்த்ய), பழுதடைந்த செரிமானத்தால் வரும் நோய்கள் (ஆமதோஷ), கழுத்தில் தோன்றும் நோய்கள் (காலரோக), பீனிசம் (பீனஸ), தோல் நோய்கள் (குஷ்ட), இருமல், ஜலதோஷத்துக்கு சர்க்கரை மற்றும் தேனுடன் சேர்த்துத் தரப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை :

திரிகடு என்ற இந்த திரிகடுகு -பல மருந்துக்கு துணை மருந்தாக அனுபானமாக உபயோகப்பதுண்டு.

திரிகடுகு - சிறந்த கார்ப்புள்ளது - நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல பிரச்சனைகளை தீர்க்கவல்லது ,நெஞ்சு சளி , ஜலதோஷத்தை நீக்கும். நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனை கூட்டும் ,இம்மண்டல பலஹீனத்தை போக்கும், நுரையீரலின் உயிர் சக்தியை அதிகபடுத்தும் ,புதுப்பிக்கும் ,கபம் சார்ந்த பிரச்சனைகளை போக்கும், பெண்களின் கரு முட்டை வெடித்தல் குறைபாடு உள்ளவர்களுக்கு பட்டு கருப்புடன் கொடுத்தல் சிறந்தது ,ஆண்களின் விந்தடைப்பு என்ற பிரச்சனைக்கும் -திரிகடு சார்ந்த ஷட்தர்ணம் சூரணத்தை பயன்படுத்தி வெற்றி பெறலாம்.

மேலும் உடல் எடை கூடிய நோயாளிகள், அதிக கொழுப்பு சத்துள்ள நோயாளிகள் ,Thyroid குறைவாக சுரக்கும் நோயாளிகள் ,உடல் வீக்கம் சார்ந்த நோயாளிகள் ,மற்றும் வளர் சிதை மாற்றமுள்ள நோயாளிகளில் இந்த மருந்து -தக்க துணை மருந்துகளோடு நன்றாக வேலை செய்யும் செரிமான சுரப்பி ,வயிற்றில் சுரக்கும் நொதி கோளாறுகள் -எப்படி இருந்தாலும் சரி செய்து -ந்யூற்றிசன் என்ற சக்தி குறைபாடில்லாமல் ,எல்லா குடல் உறிஞ்சுகளையும் வேலை செய்யவைத்து ,உடல் சக்திகளை வேலை செய்யவைக்கும் .

வலிகளை போக்கும் மருந்துகளில் -இந்த மருந்தை பல வலி நிவாரண மூலிகை மருந்துகளின் சேர்க்கையோடு சேர்ப்பதால் நல்ல பலன் கிடைக்கும். பல பற்ப ,செந்தூரங்களை கொடுக்கும் போது -த்ரிகடுவை மூல மருந்து சூரணமாக பயன் படுத்தலாம்.ஆனால் பொடிவடிவில் கிடைக்கும் சூரணமே சிறந்த பலன் அளிக்கும்

திரிகடுகு சேராத ஆயுர்வேத ,சித்த ,யுனானி மருந்தே இல்லை எனலாம்


உள்ளித்தீயல்
******

சிறிய வெங்காயம் 150 கிராம்,
தேங்காய் 1, காய்ந்த மிளகாய் 10,
மல்லி  2ஸ்பூன், மஞ்சள்  25 கிராம்,
புளி  சிறிய எலுமிச்சை அளவு,
சீரகம் கால் ஸ்பூன்,
கடுகு கால் ஸ்பூன்,
பெருங்காயம் 1 சிட்டிகை,
வெந்தயப்பொடி  1 சிட்டிகை.
கறிவேப்பிலை, எண்ணெய்,
உப்பு  தேவையான அளவு.

*வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்குங்கள். தேங்காயை துருவி, பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். புளியை ஊறவைத்து தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள்.

*7 காய்ந்த மிளகாய், மல்லி, மிளகு, சீரகத்தை வாசம் வரும்வரை வறுத்து, ஆறியபின் தேங்காயோடு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அம்மியில் அரைத்தால் நல்லது.

*வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, மீதமுள்ள காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயப்பொடி போட்டுத் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைக் கொட்டி வதக்குங்கள். வெங்காயம் சிவந்ததும், மஞ்சள் தூள், உப்புப்போட்டு, கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி கொதிக்க விடுங்கள்.

*பிறகு, அரைத்த பொருட்களைக் கொட்டி கிளறி சிறிதுநேரம் கொதிக்கவிட்டு இறக்கினால் வாசமும், சுவையும் மிகுந்த உள்ளித்தீயல் ரெடி.


பாகற்காய் ஊறுகாய்

தேவையானவை:
பாகற்காய் – 2,
எலுமிச்சம்பழம் – 4,
உப்பு – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 10.

செய்முறை: பாகற்காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் இரண்டாகக் கீறிக்கொள்ளவும். வாணலியில் ஒரு கப் தண்ணீர் வைத்து, அது கொதிக்கும்போது பாகற்காய் துண்டுகளை அதில் போடவும். பாதி வெந்துகொண்டிருக்கும்போது, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, பச்சை மிளகாயையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றியதும், இறக்கி ஆறவிடவும். எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து, அந்தச் சாற்றை பாகற்காயில் சேர்த்துக் கிளறவும். பாகற்காய் அந்தச் சாற்றில் ஊறியதும், சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அருமையான ஊறுகாய் கிடைக்கும்.


இஞ்சி அல்வா

 100 கிராம் இஞ்சியைத் தோல்சீவி அரைத்து, அத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டவும். அந்தச் சாறில் விதை நீக்கிய 10 பேரீச்சம்பழம் ஊறவிடவும்.

2 கப் பொடித்த வெல்லம் வெந்நீரில் கரைத்து வடிகட்டவும். 2 கப் பொடித்த வெல்லம் கசகசாவை லேசாக தண்ணீர் சேர்த்து மை போல அரைத்தெடுக்கவும். ஊறிய பேரீச்சம்பழத்தை அந்தச் சாறோடு மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.

அந்த விழுதோடு, வெல்லத்தண்ணீர், கசகசா விழுது சேர்த்து, வாணலியில் 2 டீஸ்பூன் நெய்விட்டுக் கிளறவும்.

அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து, தொடர்ந்து கிளறவும். அல்வா பதத்துக்கு வந்ததும் இறக்கி ஒரு டீஸ்பூன் ஏலக்காய்தூள் தூவவும்.


திரிகடுக ரசம்.

ஊளைச்சதை குறைந்து, உடல் பொலிவோடு திகழ சமயசஞ்சீவி
தேவையானவை:
கொள்ளு – அரை கப்,
சுக்கு – 10 கிராம்,
மிளகு – 10 கிராம்,
திப்பிலி – 5 கிராம் (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்),
புளி – நெல்லிக்காய் அளவு,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

தாளிக்க: எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:ஒரு டம்ளர் தண்ணீரில் கொள்ளைப் போட்டு, 5 நிமிடம் கொள்ளு வெந்ததும் அந்தத் தண்ணீரை வடித்துவைத்துக் கொள்ளவும். திப்பிலியை வெறும் வாணலியில் வறுத்து, சுக்கு, மிளகுடன் சேர்த்து மிக்ஸியில் ‘கரகர’ப்பாகப் பொடிக்கவும். புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு (கரைக்கக் கூடாது), அத்துடன் உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்ததும், தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுக்கவும். புளி கொதித்த தண்ணீரையும் கொள்ளு வேகவைத்த தண்ணீரையும் கலந்து, அதோடு தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்க்கவும். பொடித்து வைத்திருக்கும் பொடியைப் போட்டு, 2 நிமிடம் கொதிக்க விடவும் (அதற்கு மேல் கொதித்தால் சுவை மாறிவிடும்). எண்ணெயில் கடுகு, சீரகம் தாளிக்கவும்.


கொண்டக்கடலை  வடை

தேவையானவை

கொண்டக்கடலை – கால் கிலோ
கடலைப்பருப்பு – 100 கிராம்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
பச்சைமிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிது
வாழைப்பூ – ஒன்று
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – அரை லிட்டர்
செய்முறை


கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து விடவும்.
அதன்பின் கொண்டைக்கடலை கடலைப்பருப்பு இஞ்சி பச்சைமிளகாய் உப்பு ஆகியவற்றை சேர்த்து மசால்வடைக்கு அரைப்பது போல் அரைத்து எடுக்கவும்.
வாழைப்பூவை சிறிதாக நறுக்கி மோரில் ஊறவைத்து கொள்ளவும்.
பிறகு எடுத்து அரைத்து மாவுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
அத்துடன் வெங்காயம் கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெயை ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்தவுடன் அரைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அதை மசால் வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


கறுப்பு உளுந்து அடை

புரதச் சத்து மிக்க
தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி      - 250 கிராம்
கறுப்பு உளுந்து - 100 கிராம்
துவரம்பருப்பு - 1 கப்
வெங்காயம் - பெரியது 2
காய்ந்த மிளகாய் -  5
இஞ்சி - சிறு துண்டு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

• வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• புழுங்கல் அரிசி, கறுப்பு உளுந்து, துவரம்பருப்பை தனித்தனியாக 3 மணிநேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைத்து கொள்ளவும

உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு, வெங்காயம் சேர்த்துக் அடை மாவு பதத்தில் தயாரிக்கவும்.

• தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.


வெங்காய குருமா

சின்ன வெங்காயம் - 200 கிராம்,
பெரிய வெங்காயம் - 200 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 20 கிராம்,
இஞ்சி-பூண்டு விழுது - 20 கிராம்,
தேங்காய் - 2,
கடலை எண்ணெய் - 50 மி.லி.
கொத்தமல்லி தூள் - 5 கிராம்,
மஞ்சள் தூள் - 5 கிராம்,
நெய் - 10 மி.லி,
முந்திரி - 30 கிராம்,
முழு கரம் மசாலா-3 கிராம்,
கொத்தமல்லி - 50 கிராம்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?

1. சின்ன வெங்காயத்தின் தோலை உரித்தெடுத்து, இத்துடன் தேங்காய்  மற்றும் முந்திரியை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி அதில் கரம் மசாலா, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
3. இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் சேர்க்கவும்.
4. சிறிதளவு தண்ணீர் சேர்த்து முழுமையாக வேக வைக்கவும்.
5. இந்தக் கலவையுடன் அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும்.
6. இதில் நெய், உப்பு சேர்க்கவும். அதன் மேல் கொத்தமல்லி இலை, வறுத்த கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.


குதிரைவாலி பிரியாணி

300 கிராம் - பீன்ஸ்,
கேரட், 100 கிராம் - வெங்காயம்,
தக்காளி, காலிஃபிளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

4 கப் குதிரைவாலி அரிசியைக் கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு, ஏலக்காய், லவங்கப்பட்டை, வெங்காயம், பூண்டு, இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், டீஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து, நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். இதில், அரிசியைக் கொட்டிக் கிளறி, ஏழரை கப் தண்ணீர் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினாவைக் கலந்து கிளறி, குக்கரை மூடவும். மூன்று விசில்கள் வந்ததும், குக்கரை இறக்கி நெய் ஊற்றிக் கிளறிப் பரிமாறவும்


நவதானிய தோசை
***********

5 மணி நேரம் ஊறவைத்த பாசிப்பயறு 1/4 கப், கருப்பு உளுத்தம்பருப்பு 1/4 கப், கொண்டைக்கடலை 1/4 கப், பச்சரிசி 1/4 கப், துவரம்பருப்பு 1/4 கப், எள்ளு 1 ஸ்பூன்,

தேங்காய் துருவல், 3 பச்சை மிளகாய், 6 காய்ந்த மிளகாய், துண்டு இஞ்சி, கறிவேப்பிலை, அரை டீஸ்பூன் பெருங்காயம், தேவையான உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

பொடியாக அரிந்த கொத்துமல்லியை சேர்த்து மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும்.


எள்பொடி:

எள் ஜீரண சக்தியை அதிகரிக்கக்கூடியது

எள் 1 கரண்டி
கடலை பருப்பு 3 கரண்டி
வத்தல் 4
கறிவேப்பிலை
பெருங்காயம் சிறிது
தோலுடன் பூண்டு 5

அணைதையும் பொன்னிறமாக வறுத்து பொடி செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் ஆரோக்கியம் உண்டாகும்.


கும்மாயம் இனிப்பு பலகாரம்

தேவையான பொருட்கள்

நெய் (1/4 கப்)
சர்க்கரை (பனங்கட்டி சர்க்கரை) – (2 கப்)
நீர் (6 கப்)
செய்முறை

கும்மாயம் பொடி: பச்சை பயறு (1 கப்), உளுந்து (2 மே.கரண்டி), அரிசி (4 மே.கரண்டி) ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாகும் வரை வறுத்து மிக்சியில் இட்டு அரைத்து பொடியாக்கி அரித்து வைக்கவும்.

பாத்திரத்தை வாணலியில் வைத்து அரைப்பங்கு நெய்யினை ஊற்றி கும்மாயம் பொடியினை அதனுள் விட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரையும் தண்ணீரையும் விட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் இறக்கி வடித்து வைக்கவும். இந்த சர்க்கரை பாகினை வதங்கும் கும்மாயம் பொடியினுள் விட்டு நன்கு கலக்கவும்.

கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறவும். மீதி நெய்யினையும் இதனுள் ஊற்றி கிளறவவும். பாத்திரத்தில் நன்கு கும்மாயம் சுண்டும் வரை கிளறி விட்டு எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி பரவவும். இதனை சூடாகவோ குளிராகவோ பரிமாறலாம். சதுர துண்டுகளாக வெட்டியும் பரிமாறலாம்.


முளைகட்டிய பயறு தோசை

பச்சை பயறை ஒரு இரவு ஊறப்போட்டு ஒரு வெள்ளைத்துணியில் வைத்து கட்டி வைத்துவிட்டால் மறுநாள் முளை வந்துவிடும். பச்சைபயறு, தட்டப்பயறு, பட்டாணி, கொண்டைக்கடலை உள்ளிட்ட நவதானியங்கள் அனைத்தையும் இந்த தோசைக்கு தனியாகவோ, சேர்த்தோ பயன்படுத்தலாம்.

தேவை

முளைகட்டிய பயறு - கால் படி
பச்சரிசி - 200 கிராம், சீரகம் - 50 கிராம்
மிளகு - 35 கிராம், வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசியை ஊற வைத்து அதோடு முளைகட்டியப் பயறைச் சேர்த்து அரைத்து உப்புப்போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை மெலிதாக வெட்டிக் கொள்ளுங்கள். சீரகம், மிளகு இரண்டையும் தனித்தனியாக வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். மாவை ஊற்றி மேலே வெங்காயம், மிளகுத்தூள், சீரகத்தூளைத் தூவி வேகவிட்டு எடுங்கள். முளைகட்டியப் பயறு தோசை தயார்.


உடனடி முறுக்கு கலவை
முறுக்கு
பச்சரிசி மாவு   -   50 கிராம்
சாமை மாவு     -   50 கிராம்
பொட்டுகடலை மாவு - 10 கிராம்
மிளகாய் தூள்     -  1.5 கிராம்
சீரகம்     -   4 கிராம்
உப்பு  -   5 கிராம்
வெண்ணெய்   -  10 கிராம்
பெருங்காயம்   -  1 கிராம்

செய்முறை
அரிசி மற்றும் குறுந்தானிய மாவு, பொட்டுகடலை மாவு ஒன்றாக கலந்து 60 பி.எஸ் சல்லடையில் சலிக்கவும்.  மீதமுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து கலக்கவும்.
மாவுடன் 50 மிலி நீர் சேர்த்து பிசைந்து பிழிவானில் 4 மி.மி அளவுள்ளதில் பிழிந்து எண்ணெயில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 3 நிமிடம் பொறிக்கவும்.  ஆறிய பின்பு பாலித்தீன் பையில் போட்டு மூடவும்


அதிரசம்

தேவையான பொருட்கள்
அதிரசம்
அரிசி மாவு    -     70 கிராம்
சாமை மாவு   -     30 கிராம்
வெல்லம்       -    100 கிராம்
இஞ்சி பொடி -    0.35
ஏலக்காய் பொடி   -  0.35
உப்பு -  0.10
சோடியம் பை கார்பனேட்   -   0.10
எண்ணெய்   -  100

செய்முறை

பச்சரிசி மற்றும் சாமை சுத்தம் செய்து 30 நிமிடம் நீரில் ஊறவைக்கவும்.  நீரை வடிகட்டி நிழலில் 30 நிமிடம் உலர்ததவும்.  பின்பு  அரைத்து சலிக்கவும்.
வெல்லத்தை பொடித்து 20 மிலி நீர் சேர்த்து கரைத்து மஸ்லின் துணி கொண்டு வடிகட்டி 80 டிகிரி பிரிக்ஸ் கொண்டு வரவும்.
மாவுடன் மீதமுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து ஒர் இரவு முழுவதும் அறை வெப்பநிலையில்  புளிக்கவைக்கவும்.
எண்ணெய் தடவிய பாலிதீன் சுவரில் 50 கிராம் புளித்த மாவை வைத்து 6 செ.மீ தடிமனுக்கு தட்டவும்.  நடுவில் 4 மி.மீ அளவில் சிறிது ஒட்டை செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.  180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 2-3 நிமிடங்கள் பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுக்கவும்.


தேன் - தினை மாவு லட்டு
********
உடைத்த ரவை மாதிரி இருக்கும் தினை அரிசி.
தினை, ரவை - தலா 100 கிராம்.
நெய் - 100 கிராம்,
சர்க்கரை - 200 கிராம் (பொடித்தது),
பாதாம் பருப்பு அல்லது முந்திரி-தேவைக்கு ஏற்ப,
ஏலக்காய் தூள்- சிறிது,
தேன் - 100 கிராம்.

காதி கடைகளில் தினை அரிசி என்று கிடைக்கும். தினையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் போட்டு  வாசனை வரும் வரை வறுக்கவும். ரவையையும் வறுக்கவும். பின் ஆற வைத்து ரவை, தினை, ஏலக்காய் சேர்த்து நைசாக அரைக்கவும். பின்  சர்க்கரையையும் சேர்த்து அரைக்கவும். பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்துக் கலக்கவும். சிறிது நெய்விட்டு முந்திரிப் பருப்பையும் ஒன்றிரண்டாக  உடைத்து வறுத்து சேர்க்கவும். பின் நெய்யை நன்றாக சூடு செய்து கலவையில் கொட்டி கலந்து, தேன் சேர்த்து கலந்து சிறு, சிறு உருண்டையாகப்  பிடித்து பரிமாறவும்.


தினை மாவு அடை

தினை மாவு - ஒரு கப் (சூப்பர் மார்க்கெட் மற்றும் காதி கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்)

கடுகு-சிறிதளவு
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுந்து - தலா கால் கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடலைப்பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியாக 1 மணி நேரம் ஊற வைத்து பின் நன்றாக கழுவி அரைத்து, தினை மாவுடன் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை தாளித்து, அடை மாவில் கொட்டிக் கலக்கவும்.

* கடைசியாக அதில் தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்த மாவை, தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: இந்த அடை நிறைய நேரம் பசி தாங்கும். அனைத்துவிதமான சத்துக்களும் இதில் அடங்கியிருப்பதால் ஊட்டச் சத்து மிக்க சிறந்த பலகாரம்.


சத்து மாவு பொடி
********
1. கேழ்வரகு - 250 கிராம்
2. கம்பு - 250 கிராம்
3. சோளம் - 200 கிராம்
4. மக்காச்சோளம் - 200 கிராம்
5. சம்பா கோதுமை - 10 கிராம்
6. பாசி பயிறு - 10 கிராம்
7. ஜவ்வரிசி - 10 கிராம்
8. வேர்கடலை - 10 கிராம்
9. முந்திரி - 10 கிராம்
10. பாதாம் - 10 கிராம்
11. பொரிகடலை - 10 கிராம்
12. சிகப்பரிசி - 10 கிராம்
13. ஏலக்காய் - 5


அனைத்தையும் தனி தனியாக வறுத்து ஆறவைக்கவும்.
பின் மிஷினில் கொடுத்து பொடியாக்கி ஆறவைத்து கொள்ளவும்.
இதை 100 மில்லி பாலுக்கு 1 மேஜைக்கரண்டி வீதம் சேர்த்து கஞ்சி காய்ச்சலாம்.

செட்டிநாடு காய்கறி பிரியாணி

தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – அரைகிலோ
பீன்ஸ், கேரட்,  காளிஃபிளவர் போன்ற காய்கறிகள்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 6
பச்சை மிளகாய் – 5
இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
தேங்காய் பால் – 2 கப்
தண்ணீர் – 3 கப்
கொத்தமல்லி, புதினா - 1/2 கப்
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ் பூன்
மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீ ஸ்பூன்
பட்டை - 2 துண்டுகள்
கிராம்பு – 5
பிரியாணி இலை – 1
ஏலக்காய் – 3
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 3 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

பிரியாணி செய்முறை
அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். தேவையான பொருட்களை எடுத்து தயாறாக வைக்கவும். முதலில் காய்கறிகள்  சிறிதளவு உப்பு, ஒரு டீ ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது சிறிதளவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் அரைகப் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேகவிடவும்.

பின்னர் காய்கறிகள் தனியாக எடுத்து வைக்கவும்.குக்கரில் எண்ணெய் 2 டீ ஸ்பூன் தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாயை முழுதாக போட்டு லேசாக மூடிவைக்கவும். பின்னர் பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும். இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.இத்துடன், மிளகாய் தூள், கரம் மசாலாதூள், உப்பு, தயிர் சேர்த்து கிளறவும். நன்றாக குழைந்து மசாலா வாசனை போனபின்பு, வேகவைத்த                        
காய்கறிகள் சேர்த்து கிளறவும்.இத்துடன் தண்ணீர், தேங்காய்ப்பால் சேர்த்து கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி விசில் போடாமல் முக்கால் பாகம் வேக விடவும். இப்போது அதன் மேல் புதினா, மல்லித்தழை தூவி, ஒரு டீ ஸ்பூன் நெய் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் தம் போடவும். சாதம் முழுதாக வெந்ததும் இறக்கவும். சுவையான செட்டிநாடு காய்கறி பிரியாணி தயார். இத்துடன் தயிர் ரைதா தொட்டுக்கொள்ள இருந்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

No comments:

Post a Comment