பெண் குழந்தைகள் இடுப்பு வலிமை பெற
கருப்பு உளுந்து லட்டு
தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து - 1 கப்
பொட்டுகடலை - 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த வெல்லம் - 3/4 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
நெய் தேவையான அளவு.
சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரி பருப்பு சிறிதளவு.
செய்முறை:-
1.முதலில் கருப்பு உளுந்தை கல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி வெயிலில் உலர்த்தி வெறும் வாணலியில் வாசனை வரும் வரை சிவக்க
வறுத்தெடுத்து ஆற வைக்கவும்.
2.வறுத்த பருப்பு நன்கு ஆறியதும் அதனுடன் பொட்டுகடலை சேர்த்து நைசாக பொடித்தெடுத்து சலித்து வைத்துக்கொள்ளவும்.
3.சலித்தெடுத்த மாவுடன் பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
4.ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு நெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும்.
5. சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமானதும் வெல்லம் கலந்து வைத்துள்ள லட்டு மாவில் நெய் ஊற்றி கரண்டியால் கலந்து விட்டு கை பொறுக்கும் சூடு இருக்கும் போதே விருப்பமான அளவில் லட்டுகளாக பிடித்து வைக்கவும்.
6.சத்துக்கள் பல நிறைந்த சுவையான இந்த கருப்பு உளுந்து லட்டு சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும்.
7.முக்கியமாக வளரும் பெண் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுப்பதினால் இடுப்பு எலும்புகள் நல்ல வலுவாக இருக்கும்.
குறிப்பு:
1. சிறிதளவு பொட்டுகடலை சேர்த்து பொடிப்பதனால் உடையாமல் லட்டு பிடிக்க சுலபமாக இருக்கும்.
2.நெய்யை காய வைத்து மாவில் ஊற்றும் போது நன்கு நுரைத்துக்கொண்டு வர வேண்டும்.
3.நெய் மற்றும் வெல்லத்தின் அளவை அவரவர் ருசிக்கேற்ப கூட்டிக்கொள்ளலாம்.
உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.
தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து.
உடல் சூடு தணிய
இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.
உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
தாது விருத்தியாக
உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.
எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு
தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.
இடுப்பு வலுப்பெற
சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.
குழந்தைகளுக்கு
சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.
பெண்கள்
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.
உளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு மருத்துவப் பயன் உள்ளது.உளுந்தை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்
++++++++++++++++++++++++++++++++++
கம்பு உருண்டை
தேவையானவை:
கம்பு மாவு - ஒரு கப்
கருப்பட்டி - ஒன்றரை கப்
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
கம்பு மாவை, எண்ணெய் இல்லாமல் மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை அடி பிடிக்காமல் நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும். கருப்பட்டியைத் தூள் செய்து, கனமான அடிப்பகுதியுள்ள ஒரு வாணலியில் சேர்த்து, கூடவே 50 மில்லி தண்ணீர் விட்டு கருப்பட்டியைக் காய்ச்சவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். இனி, சூடான பாகுடன் மாவைக் கலக்கவும். முதலில், கரண்டியால் கிளறி, பின்னர் கையால் கவனமாக பதம் வரும் வரை பிசிற வேண்டும். உருண்டை பதம் வரும்போது கையால் உருண்டை பிடிக்கவும். உருண்டை பிடித்தால் உடையக் கூடாது. உருண்டை பிடிக்கும் போது கைகளில் நெய்யைத் தடவிக்கொண்டு உருண்டை பிடித்தால், உருண்டை வாசனையாகவும், கைகளில் ஒட்டாமலும் வரும்.
குறிப்பு:
கம்பை முளைக்கட்ட வைத்து நன்கு வெயிலில் காய வைக்கவும். பிறகு, மெஷினில் கொடுத்து கம்பு மாவாக அரைத்து காற்றுப் புகாத டப்பாவில் வைத்துக்கொண்டால், நீண்ட நாட்கள் கெடாது. பலவித உணவு வகைகளை இதில் தயார் செய்யலாம்.
+++++++++++++++++++++++++++++++++++
பாதம் பருப்பு லட்டு:
தேவையான பொருள்கள்
பாதாம் பருப்பு - 20
பாசி பருப்பு - அரை கிலோ
சர்க்கரை - அரை கிலோ
கிஸ்மிஸ் பழம் - 10
நெய் - 100 கிராம்
செய்முறை
பாதாம்பருப்பு, பாசிப்பருப்பு, ஆகியவற்றைத் தனித் தனியாக வெறும் வாணலியில்
வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டி அதனுடன் நெய்யில் வறுத்த கிஸ்மிஸ் பழம் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி வைக்கவும்
பின்பு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் மிக்ஸ் பண்ணிய கலவையை அதில் கொட்டி நன்கு கிளரி சூடாக இருக்கும் போதே சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
புரதச்சத்து நிறைந்த லட்டு ரெடி
+++++++++++++++++++++++++++++
எள்ளு லட்டு
400 கிராம் வறுத்த எள், 300 கிராம் கொட்டை நீக்கிய பேரீட்சை அல்லது வெல்லம், உலர் திராட்சை 100 கிராம், முந்திரி 50 கிராம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு.
எள்ளை மிக்சியில் அரைத்து அதனுடன் உலர் திராட்சையும் பேரீட்சையையும் கழுவி வெல்லம் சேர்த்து அரைக்கவும். விருப்பப்பட்டால், பனங்கற்கண்டு சேர்க்கலாம். ஏலத்தூள், முந்திரி கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
பலன்கள்:
நல்ல சத்தான உணவு. உடல் இளைத்தவர்கள் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர, உடல் தேறும். நல்ல தெம்பு கிடைக்கும். பசி தாங்கும் உணவு இது. மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் தாய்ப்பால் அதிகம் சுரக்க எள்ளு லட்டை சாப்பிடலாம்.
இயற்கை இனிப்பு லட்டு
முந்திரி, பாதாம், பேரீட்சை தலா 100 கிராம், உலர் திராட்சை, வெள்ளரி விதை தலா 50 கிராம், பிஸ்தா 20 கிராம், ஏலக்காய்த்தூள்.
பேரீட்சைப் பழங்களின் கொட்டைகளை நீக்கி சுத்தப்படுத்தி எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைக்கலாம். லட்டு போல் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும். விருப்பப்பட்டால், தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ளலாம்.
பலன்கள்:
ஊட்டச்சத்தான லட்டு. நோஞ்சான் குழந்தைகளுக்கு காலை டிஃபனுக்கு பதிலாகத் தரலாம். ரத்த சோகையைப் போக்கும். அதிகத் தூரப் பயணம், வேலைப்பளு அதிகம் உள்ளவர்கள் தினமும் இரண்டு லட்டுகள் சாப்பிடலாம். பசியைப் போக்கும் உன்னத உணவு.
வேர்க்கடலை - பொட்டுக்கடலை லட்டு
300 கிராம் வறுத்த வேர்க்கடலை, 150 கிராம் பொட்டுக்கடலை இரண்டையும் மிக்ஸியில் அரைத்து, பேரீட்சை, உலர் திராட்சை சேர்த்து அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பைக் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடிக்கலாம். தேவைப்பட்டால், தேன் அல்லது நெய் சேர்க்கலாம்.
பலன்கள்:
பசியைப் போக்கும். உடலுக்கு தெம்பைக்கூட்டும். உரமாய் வைத்திடும். உடல் உழைப்பாளர்கள் அடிக்கடி சாப்பிடலாம். போஷாக்கு நிறைந்த உணவு.
No comments:
Post a Comment